நாமக்கல் இ.பி.காலனி கூட்டுறவு சங்க செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல் இ.பி.காலனி கூட்டுறவு சங்க செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 10:31 AM GMT)

நாமக்கல் இ.பி.காலனி கூட்டுறவு சங்க செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பொது பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்க செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு சங்க செயலாளர்

நாமக்கல் பெரியப்பட்டி ரோடு பொன்னர் சங்கர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் இ.பி.காலனியில் உள்ள பொது பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பத்மா. இவர் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ரம்யா என்ற மகளும், தரனேஷ் என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரவிச்சந்திரன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். மாலை 4 மணி அளவில் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய தரனேஷ், தந்தை ரவிச்சந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தற்கொலை

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் தந்தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து பத்மா நாமக்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story