ஜல்லிக்கட்டு டோக்கன் வழங்கக்கோரி திடீர் மறியல்


ஜல்லிக்கட்டு டோக்கன் வழங்கக்கோரி திடீர் மறியல்
x

ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வழங்கக்கோரி அன்னவாசல் பஸ் நிலையம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

அன்னவாசலில் நாளை (திங்கட்கிழமை) விருத்தபுரீஸ்வரர் தர்மசம்வர்த்தினி கோவில் தேர் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில், புதுக்கோட்டை, திருச்சி, மணப்பாறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு திடலை தயார்படுத்தும் பணி, பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமரும் இடம், மருத்துவ முகாம் அமைக்கும் இடம் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்த இளைஞர்கள் காளைகளுக்கு முறையாக டோக்கன் வினியோகம் செய்யவில்லை எனவும், இதில் குளறுபடி இருப்பதாக கூறி புதுக்கோட்டை- இலுப்பூர் சாலையில் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வருவாய் துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story