189 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம் வழங்க இலக்கு


189 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம் வழங்க இலக்கு
x

2022-2023-ம் நிதி ஆண்டில் 189 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை
2022-2023-ம் நிதி ஆண்டில் 189 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கடனுதவி

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் பெண்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும், உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப்பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், உற்பத்தி பிரிவிற்கு ரூ.50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

ரூ.5.46 கோடி

இந்த திட்டத்தில் 2022-2023-ம் நிதி ஆண்டிற்கான 189 பேருக்கு ரூ.5.46 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழிமுறைகளை பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். திருத்திய வழிகாட்டுதலின்படி, கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில்கள் தொடங்க கடன் வசதி செய்து தரப்படும்.

தெரிந்து கொள்ளலாம்

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in, என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையை நேரிலோ அல்லது 04575 240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story