விவசாய நிலம் வாங்க மானிய கடன்


விவசாய நிலம் வாங்க மானிய கடன்
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:48 PM GMT)

ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் விவசாய நிலம் வாங்க மானிய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிலம் வாங்க மானிய கடன்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க விழுப்புரம் மாவட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டிற்கு மொத்த இலக்கு எண்ணிக்கை 7 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் ஆதிதிராவிடர்களுக்கும், ஒரு பழங்குடியினருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு துறை அமைச்சரின் புதிய அறிவிப்பில் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நிலம் வாங்க தலா ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தவராக இருக்க வேண்டும். மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன் பெயரில் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்கக்கூடாது. வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சைநிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பதிவுசெய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story