குழந்தைகள் பசியாற உணவு அருந்தி படிக்கும்போது சிறந்த நிலையை அடைய முடியும்: அமைச்சர்


குழந்தைகள் பசியாற உணவு அருந்தி படிக்கும்போது சிறந்த நிலையை அடைய முடியும்: அமைச்சர்
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 12:50 PM GMT)

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி காலை உணவு வழங்கும் தி்டடத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்டாச்சிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அ.சா.ஏ.பிரபு, ராஜீவ்காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி காலை உணவு வழங்கும் தி்டடத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பள்ளிக்கூடம் வரும் குழந்தைகள் பசியோடு இருந்தால் பாடத்திட்டம் மனதில் படியாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார். எனவே மாணவர்கள் வீட்டில் பெற்றோர்களை எதிர்பார்க்காமல் நேரத்தோடு பள்ளிக்கு வந்து உணவு அருந்தி விட்டு மிகுந்த கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு குழந்தைக்கு ஆரம்ப கல்விதான் முக்கியம். அந்த கல்வியை பசியாற உணவு அருந்தி படிக்கும்போது சிறந்த ஒரு நிலையை அடைய முடியும். இதன் மூலம் நீங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

நீங்கள் நல்ல முறையில் படித்தால் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும். அரசு வழங்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நீங்கள் நினைக்கின்ற கல்வியை பயில முடியும். இப்படி பல்வேறு சலுகைகள் இருப்பதால் குழந்தை செல்வங்களாகிய நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, செயற்பொறியாளர் ராஜா, தாசில்தார் கற்பகம், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரேமா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வீரபாண்டி நடராஜன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் இளஞ்செழியன், ஜீவானந்தம், பழனி, ஜெய்சங்கர், அவைத்தலைவர் சக்திசிவம், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் அந்தோணியம்மாள், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story