விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரைவில் சொந்த கட்டிடம் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்  அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரைவில் சொந்த கட்டிடம்  ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
x

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரைவில் சொந்த கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

68 ரேஷன் கடைகள் பிரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் 68 ரேஷன் கடைகள் உள்ளன. ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த கடைகளை பிரிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகவல் சொல்ல வேண்டும். இப்பணிக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,254 ரேஷன் கடைகளில் சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அனைத்து கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும். இதற்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 11 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 28,089 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

போலி அட்டைகள் நீக்கம்

இந்த ஓராண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விரைவில் பாக்கெட் மூலம் பொதுமக்களுக்கு அரிசி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்தாலும் அதை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, மணிக்கண்ணன், சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, அரகண்டநல்லூர் பேரூராட்சி தலைவர் அன்பு உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

ஆய்வு

முன்னதாக காணையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், காணைகுப்பத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு, பெரும்பாக்கம் ரேஷன் கடை ஆகியவற்றை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story