பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்த மாணவர்கள்


பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்த மாணவர்கள்
x

வெள்ளியணை மேட்டுபட்டியில் பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்த மாணவர்களிடம் அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

கரூர்

பொருளாதார ரீதியாக சிரமம்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மேட்டுப்பட்டி, நடு மேட்டுப்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 70- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வெள்ளியணையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேட்டுப்பட்டியில் இருந்து வெள்ளியணைக்கு தினந்தோறும் தனியார் மினி பஸ்சில் கட்டணம் செலுத்தி இம்மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

தினந்தோறும் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு சென்று வருவது பெற்றோர்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தியதாலும், பல நேரங்களில் இந்த மினிபஸ் வராமையாலும், காலை, மாலை வேளைகளில் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் தங்கள் பகுதிக்கு அரசு பஸ்சை இயக்கி பஸ் பாஸ் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக இப்பகுதி பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து...

இந்த நிலையில் தற்போது இந்த பகுதி வழியாக சென்று வந்த தனியார் மினி பஸ்சும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இயக்கப்படவில்லையாம். இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு புத்தக பைகளை தூக்கிக்கொண்டு நடந்து சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது இப்பகுதி மாணவர்கள் தங்களுக்கு காலை, மாலை வேளைகளில் பள்ளி சென்று வர அரசு பஸ் வசதி வேண்டுமென கோரி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து வீட்டிலேயே இருந்தனர்.

இந்த மாணவ- மாணவிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பட்டியில் செயல்படும் அரசு தொடக்க பள்ளிக்கும் நேற்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பவில்லை. இந்த மாணவர்கள் அனைவரும் நேற்று காலை ஒன்று கூடி அந்த பகுதியில் உள்ள சாவடியில் பள்ளி சீருடையுடன் அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவலறிந்த வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்விதுறை) மணிவண்ணன் தலைமையிலான பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு பஸ் இயக்குவதாக உறுதி

இதில் சமாதானமடைந்த தொடக்கப்பள்ளி மாணவர்களின் பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை, மாலை வேளைகளில் வெள்ளியணையில் இருந்து இந்த வழியாக அரசு பஸ் இயக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் மாணவர்களை பள்ளிக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு இல்லை

வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி கஸ்தூரி கூறுகையில், எங்கள் ஊரில் என்னை போன்ற பெண் பிள்ளைகளை உள்ளூரில் தொடக்கக்கல்வி அளவு மட்டுமே படிக்க வைத்து, பின் நிறுத்தி விடுவார்கள். சில ஆண்டுகளாகத்தான் மேல்நிலை கல்வி கற்க ஊரை விட்டு வெளியே அனுப்புகின்றனர். அதுவும் உள்ளூரில் பஸ் ஏறி பள்ளிக்கு அருகிலேயே இறங்கி பள்ளிக்கு செல்வதால் தான். எங்கள் பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். மேலும் குழந்தை திருமணம் அதிகம் நடக்கும் பகுதி. இதனால் இதிலிருந்து மீண்டு விழிப்புணர்வு பெற கல்வி பெறுவது என்னை போன்ற பெண் குழந்தைகளுக்கு அவசியமாகும். சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்றால் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என கருதிபெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.எனவே எங்கள் கல்வி தொடர அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

ஆடு, மாடு மேய்க்க அனுப்பி விடுவோம்

மேட்டுப்பட்டியை சேர்ந்த எஸ்.பி. ராஜேந்திரன் கூறுகையில், இந்த பகுதியில் இருந்து தற்போது தான் அதிகப்படியான மாணவ-மாணவிகள் மேல்நிலை கல்வி கற்க வெள்ளியணைக்கு அனுப்புகிறோம். முன்பெல்லாம் தொடக்கக்கல்வி முடிந்தவுடன் குழந்தைகளை ஆடு, மாடு மேய்க்க அனுப்பி விடுவோம். அதற்குக் காரணம் குழந்தைகள் பாதுகாப்பாக எங்களுடன் இருக்க வேண்டும் என்பதால் தான். தற்போது பஸ் வசதி இருப்பதால் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வருவதாக நாங்கள் உணர்கிறோம். 4 கிலோ மீட்டர் நடந்தோ, சைக்கிளிலோ சென்று வருவது தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திவிடும். எனவே அரசு நடவடிக்கை எடுத்து நீண்ட நாள் கோரிக்கையான எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.


Next Story