படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்


படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
x

கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. தற்போது அந்த நிலை மாறும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக அரசு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில், கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் நகர் பகுதியில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

குறைந்த எண்ணிக்கையில்...

இவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு டவுன் பஸ்களிலேயே நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு எளிதாக வந்துசெல்ல கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு போதிய அளவில் பஸ் வசதி இல்லை. இதனால் காலை, மாலை வேளைகளில் அரசு பஸ்களில் கூட்டநெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவ- மாணவிகள் தனியார் பஸ்சில் செலவு செய்து அனுப்ப வசதி இல்லாததால் அவர்கள் அரசு டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர். ஆனால் கிராமப்புறங்களுக்கு காலை, மாலை வேளையில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

இதன் காரணமாக காலையில் பள்ளி செல்லவும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பவும் மாணவ- மாணவிகள் தினம், தினம் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் கிடைக்கின்ற பஸ்களில் சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், இடநெருக்கடியால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். சிலர் பஸ்சின் பின்புறத்தில் உள்ள ஏணிப்படிகளில் தொங்கிக்கொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை காண முடிகிறது.

மாணவர்கள் ஆபத்தான பயணம்

இவ்வாறு பஸ்சில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களை மாவட்ட நிர்வாகம், காவல்துறை எவ்வளவோ முறை எச்சரிக்கை செய்தும், தகுந்த அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அந்த நிலை இன்னும் மாறவில்லை. தற்போதும் கிராமப்புறங்களில் இருந்து நகர்புறத்திற்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவது தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு போதிய டவுன் பஸ்கள் இயக்கப்படாததே காரணம் என்று மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம் அருகே பரனூரில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கும் (தடம் எண் 283), திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரத்திற்கும் (தடம் எண் 276) இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. அதுபோல் முகையூரில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்கள் (தடம் எண் 151, 6 எப்), காணையில் இருந்து விழுப்புரம் வழியாக காஞ்சீபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (தடம் எண் 301) ஆகிய பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

இந்த பஸ்கள் முன்பு காலை 7.50 மணியில் இருந்து 8.30 மணி வரை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. இதனால் காணை, மாம்பழப்பட்டு, சென்னகுணம், ஆயந்தூர், கல்பட்டு, கருங்காலிப்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் விழுப்புரம் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வர மிகவும் உதவியாக இருந்தது. அதுபோல் கூலி வேலைக்கு செல்லும் ஏராளமான தொழிலாளர்களும் இந்த பஸ்களில் பயணம் செய்து விழுப்புரம் வருவார்கள்.

பயணிகள் கூட்டம் அலைமோதல்

ஆனால் மேற்கண்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதனால் 8.30 மணிக்கு பிறகு வரக்கூடிய பஸ்களில் புறப்பட்டால் பள்ளி- கல்லூரிகளுக்கு வர மிகவும் தாமதமாகி விடும் என்பதால் காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள்ளாக இயக்கப்படும் பஸ்களில் மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அதுபோல் கூலி வேலைக்கு செல்பவர்களும் இதே பஸ்களில் பயணம் செய்கின்றனர். இதனால் அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு பஸ்சில் 80-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் நிலையில் இருமடங்காக 150 பேர் வரை பயணம் செய்கின்றனர். இதனால் பஸ்சினுள் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் மாணவர்கள், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர்.

அதுபோல் காலை 7.50 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் தனியார் பஸ்களிலும் இதே நிலைதான் உள்ளது. அவர்கள், அரசு பஸ்சை விட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொள்வதோடு அதிவேகமாகவும் செல்கின்றனர். இதன் காரணமாக சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதுபோன்று மாலையிலும் நகர்புறத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி- கல்லூரி முடிந்து மாணவ- மாணவிகளும், மற்றும் கூலி வேலையை முடித்துக்கொண்டு தொழிலாளர்களும் வீடு திரும்புவதற்கு தினம், தினம் கடும் போராட்டத்தை அனுபவித்து வருகின்றனர். இதே நிலைமை பல கிராமங்களில் தொடர்ந்து நீடித்து வருவதால் கரணம் தப்பினால் மரணம் என்ற கதியில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்காவிட்டாலும் பரவாயில்லை, ஏற்கனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கினாலே பேருதவியாக இருக்கும் என்று மாணவர்கள், பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் நலனை கருதி காலை, மாலை வேளைகளில் நகர்புறத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதலாக பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொருந்திருந்து பார்ப்போம்.


Next Story