மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Sep 2024 9:44 AM GMT (Updated: 24 Sep 2024 10:25 AM GMT)

அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தொழில்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி தொழில்பாடங்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் தொழில் பயிற்றுநர்கள் நியமிக்கப்படாதது மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும். இது தெரிந்திருந்தும் இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதை அனுமதிக்க முடியாது.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை வழங்குவதற்காக புதிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்; பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.

அதேநேரத்தில், மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி, வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கும் தொழில் பயிற்றுநர்களை நியமிக்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதை அனுமதிக்க முடியாது. ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு தொழிற்பயிற்றுநர்களை நியமிக்க நிதியில்லை என்பதை நம்ப முடியவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story