அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்


அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்
x
தினத்தந்தி 17 Oct 2023 7:45 PM GMT (Updated: 17 Oct 2023 7:46 PM GMT)

தாரமங்கலம் அருேக அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருேக அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 740 மாணவர்கள் படித்து வருகின்றனர். 20 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த ஓராண்டு காலமாக மாணவர்களிடையே சிறு,சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எறிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவர்கள் இருபிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த போலீசாரை பார்த்து மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

மாணவர்களுக்கு எச்சரிக்கை

இது தொடர்பாக நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியை உமாராணி ஆகியோர் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். மேலும் பள்ளிக்கு வந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்ட போலீசார் முன்னிலையில் மாணவர்களை அழைத்து தொடர்ந்து தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.

மேலும் பள்ளியில் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் தலைமை ஆசிரியை உமாராணியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூட்டம் முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story