சத்து மாத்திரைகளை தின்ற மாணவன் மருத்துவமனையில் அனுமதி


சத்து மாத்திரைகளை தின்ற மாணவன் மருத்துவமனையில் அனுமதி
x

கறம்பக்குடி அருகே பள்ளி மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு சத்து மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து தின்ற 2-ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புதுக்கோட்டை

அரசு தொடக்கப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ராங்கியன் விடுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 39 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து கொட்டியது. இதையடுத்து அந்த கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. இன்னும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.

இதனால் அந்த பள்ளி மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் அமைத்து கொடுத்த தகர கொட்டகையில் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் இல்லை. மாற்றுப் பணி அடிப்படையில் ஒரு ஆசிரியர் மட்டும் வந்து செல்கிறார். அவரும் சரியாக வர முடியாததால் பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் நியமிக்கப்பட்ட தன்னார்வ ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

மாத்திரைகள் தின்ற மாணவனுக்கு வாந்தி

இந்நிலையில் அப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரூபன் (வயது 6) நேற்று முன்தினம் மதிய இடைவேளையின் போது பள்ளி மேஜையில் வைக்கப்பட்டிருந்த 10 போலிக் ஆசிட் மாத்திரையை (இரும்பு சத்து மாத்திரை) மிட்டாய் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாலையில் வீடு திரும்பியதும் மாணவன் ரூபனுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவனிடம் விசாரித்த போது இரும்பு சத்து மாத்திரையை ரூபன் அதிகமாக தின்றது தெரியவந்தது.

மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து பெற்றோர் மாணவனை கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் தொடர் கண்காணிப்பிற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவன் ரூபன் சிகிச்சை பெற்று வருகிறான். மிட்டாய் என நினைத்து அதிக இரும்பு சத்து மாத்திரையை தின்ற மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை

பள்ளி கட்டிடம் இல்லாதது, ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ராங்கியன் விடுதி அரசு தொடக்கப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர் நியமித்து, விரைவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story