மாணவிகள் சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லை


மாணவிகள் சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லை
x

ராமேசுவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பு சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம், அக்.2-

ராமேசுவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பு சாலையை கடக்க உதவிக்கு யாரும் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெருக்கடி

ராமேசுவரம் ராமர் தீர்த்த பகுதியில் செயல்பட்டு வருகிறது எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் ராமேசுவரம் நகரின் பல்வேறு பகுதி மற்றும் தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

ராமேசுவரம் கோவில் மற்றும் பஸ்நிலையம் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த பள்ளி அமைந்து உள்ளது. இதனால் எந்தநேரமும் இந்த பள்ளியின் சாலையானது அதிக வாகன நடமாட்டத்துடன் போக்குவரத்து நெருக்கடியுடன் பரபரப்பாகவே காட்சியளிக்கும்.

இந்த நிலையில் ராமேசுவரம் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி விடப்படும் மாலை நேரங்களிலும் மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலையை கடக்க உதவி

வாகனங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் அவசரக் கதியில் கடக்க வேண்டிய நிலையே இருந்து வருகின்றது. பள்ளியை விட்டு வரும் மாணவிகள் சாலையை கடக்கும் போது பல மாணவிகள் ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மோதி பலத்த காயமும் அடைந்துள்ளனர்.

முக்கிய சாலையில் அமைந்துள்ள அரசு பெண்கள் பள்ளியின் முன்பு போக்குவரத்து போலீசார் ஒருவர் கூட பாதுகாப்பிற்கு வராததால் அவ்வப்போது மாணவிகளை அழைக்க வரும் பெற்றோர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மேலும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் மாலை நேரங்களில் சாலையில் நின்று வாகனங்களை நிறுத்தி மாணவிகளை சாலையை கடக்க உதவி செய்கின்றனர்.

பாதுகாப்பு

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

ராமேசுவரம் சுடுகாட்டம் பட்டி தில்லை பாக்கியம்: ராமேசுவரம் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பஸ்நிலையம் செல்லும் முக்கிய சாலையில் அமைந்து உள்ளது. எந்நேரமும் இந்த சாலையில் அதிகமான போக்குவரத்து இருப்பதால் மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே எஸ்.பிஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் கண்டிப்பாக போக்குவரத்து போலீசார் ஒருவரை இந்த பள்ளியின் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரத்தை சேர்ந்த கண் இளங்கோ கூறியதாவது:- ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். முக்கிய சாலை பகுதியில் இந்த பள்ளிக்கூடம் அமைந்துள்ளது எந்நேரமும் அதிகமான வாகனங்கள் செல்லும் முக்கிய சாலை ஆகும்.

நடவடிக்கை

மாணவிகளின் பாதுகாப்பு கருதியாவது இந்த பள்ளியின் முன்பு போக்குவரத்து போலீசார் ஒருவரை காலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்களின் விருப்பம். இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே ராமேசுவரத்தின் முக்கிய சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் வாசல் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story