கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:45 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி, கிருஷ்ணகிரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

பணி நிரந்தரம் செய்யக்கோரி, கிருஷ்ணகிரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பால்ராஜ், செந்தில், முரளி, ராஜா, ஸ்ரீதர், சென்னகிருஷ்ணன், கனகராஜ், வடிவேலு உள்பட, 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில், 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். கவுரவ விரிவுரையாளர்களாக 59 பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு பணியாற்றி வருகிறார்கள். யாரும் பணி நிரந்தரமாக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள் படி தகுதியுள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

தொகுப்பூதியம்

கடந்த ஆட்சியில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு பின் தற்போதைய அரசு அதை செயல்படுத்தவில்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு கிடைக்கும் தொகுப்பூதியமும் போதுமானதாக இல்லை. அதையும் முறையாக வழங்குவதில்லை.

இதனால் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி அனைத்து கவுரவ விரிவுரையாளர் சங்கங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிரந்தர பணி, சமவேலை சமஊதியம் கிடைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story