வணிகர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


வணிகர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் வணிகர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மெட்ரோ கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னப்பன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி நகர வணிகர் சங்க தலைவர் சுரேஷ், செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து வணிகவரித்துறை அலுவலர் சாமுண்டீஸ்வரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வணிகவரித்துறையினரால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை கடைகளில் ஆய்வு செய்வது, டெஸ்ட் பர்ச்சேஸ் செய்வது தொடர்பாக, அறிவிப்புகள் வெளியானபோதே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. மீண்டும் டெஸ்ட் பர்ச்சேஸ் தொடர்பான வணிகவரித்துறையின் அறிவிப்பு கடந்த செப்டம்பர் 6-ந் தேதி வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தி உள்ளது. அனைத்து சில்லரை கடைக்காரர்களும் பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரியை செலுத்தி விற்பனை செய்கின்றனர். விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஏற்கனவே வரிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள், சில்லரை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்கிற பெயரில் பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story