மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், பழனிசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

இந்த போராட்டத்தில், 80 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு அரசின் போட்டி தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அரசு துறையில் 1 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

பேச்சுவார்த்தை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாகவே மாத உதவி தொகையை தலா ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையங்களில் கட்டாயமாக சைகை மொழி பயிற்சியை சேர்க்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்கள் அரசு செலவில் நியமிக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story