அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்துமேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்


அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்துமேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
x
சேலம்

மேச்சேரி

மேச்சேரி பேரூராட்சி 11-வது வார்டில் அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

உள்ளிருப்பு போராட்டம்

மேச்சேரி தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் கலந்து மழைநீர் வீட்டுக்குள் செல்கிறது.

இதையடுத்து அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி தி.மு.க. கவுன்சிலர் தனம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் தனம் பேரூராட்சி அலுவலகத்தில் தனது கணவர் பிரசாத்துடன் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை

இது குறித்து கவுன்சிலர் தனம் கூறுகையில், எங்கள் வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இந்த உள்ளிருப்பு போராட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது.

அப்போது செயல் அலுவலர், கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story