தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்துவருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்


தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்துவருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் சஸ்பெண்டு

ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் என்பவரை, அரசியல் தலையீடு காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் குருநாதன் தலைமை தாங்கினார். வட்டத்தலைவர் குமரேசன், துணை தாசில்தார் மகேஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, நகராட்சி, மாநகராட்சி சங்க துணைத்தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாசில்தார் சரவணமூர்த்தி, மண்டல தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் எந்த பணியும் நடைபெறவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில், தாசில்தாரை இடைக்கால பணிநீக்கம் செய்த கலெக்டரின் நடவடிக்கையும், இதனை திசை திருப்ப மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்தும், பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசியும், அரசு நிர்வாகத்தில் அத்துமீறி தலையிடும் எம்.எல்.ஏ.வின் நடவடிக்கைகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story