போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறிமத்தூரில் பொதுமக்கள் போராட்டம்சாலையில் டயர்களை போட்டு அடைத்ததால் பரபரப்பு


போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறிமத்தூரில் பொதுமக்கள் போராட்டம்சாலையில் டயர்களை போட்டு அடைத்ததால் பரபரப்பு
x
கிருஷ்ணகிரி

மத்தூர்

போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி மத்தூரில் டாஸ்மாக் கடை முன்பு சாலையில் டயர்களை போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் சின்ன ஏரியின் பின்புறம் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சிக்கன் கடைகள், மீன் வறுவல் கடைகள், ஓட்டல் கடைகள், பேக்கரிகள், டீக் கடைகளும் உள்ளன. டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ள ஏரிக்கரை பகுதியின் வழியாக மூக்காகவுண்டனூர், ஆலரஅள்ளி, சைதாப்பேட்டை ஆகிய கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

மேலும் டாஸ்மாக் கடைக்கு ஏராளமான மதுபிரியர்கள் வந்து செல்கின்றனர். இதையடுத்து மத்தூர் போலீசார் இந்த குறுக்கு சாலை வழியாக வரும் வாலிபர்களுக்கு அடிக்கடி போதையில் வாகனங்களை ஓட்டியதாக பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு ஓட்டல் கடை முன்பு நின்று இருந்த சைதாப்பேட்டையை சேர்ந்த திலகரசன் (வயது 24) என்ற வாலிபர் மீது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறி மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து அப்பகுதியை 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் டயர்கள் மற்றும் மரக்கட்டைகளை போட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story