குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை;உதவி ஆணையாளர் எச்சரிக்கை
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு
தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் ரமேஷ் ஆகியோர் அறிவுரையின்படி, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சட்டமுறை எடை அளவு சட்டப்படி ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 39 கடைகளில் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 9 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதேபோல் 28 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 3 கடைகளில் முரண்பாடுகள் இருந்தது தெரியவந்தது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் 46 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடும் நடவடிக்கை
குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ், ஈரோடு பகுதிகளில் உள்ள உணவு நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனரா? என்பது குறித்து 44 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் கூறியதாவது:-
எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்களை அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடை அளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடை அளவு பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குறியதாகும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 வயது முதல் 18 வயதுக்குபட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணியில் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.