பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?


பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாய்களால் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையில் நாய்கள் திரிகின்றன. இந்த நாய்கள் ஓட்டல்கள், இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளை தின்று விட்டு தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களுக்கு முறையாக வெறிேநாய் தடுப்பூசி போடுவதில்லை. இதனால் இந்த நாய்கள் கடித்து பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை அருகே ஒரு வாலிபர் தெரு நாய் கடித்து உயிரிழந்தார். நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்துக்குள்ளானதில் தந்தையுடன் சென்ற ஒரு குழந்தை இறந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

தொல்லை அதிகரிப்பு

இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, பாலபாக்யாநகர் பகுதி, நெல்லை டவுன், பழையபேட்டை பகுதி, தச்சநல்லூர் உலக அம்மன் கோவில் பகுதி, பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகர், மேலப்பாளையம் சந்தை முக்கு, மாட்டுச்சந்தை, அண்ணாநகர், அம்மன்கோவில் தெரு, ஆமீன்புரம், கொட்டிகுளம், வாய்க்கால்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.

மாட்டு சந்தை அருகே இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அங்கு 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் மொத்தமாக கிடந்து அங்கு வருவோரை கடித்து குதறி உள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் நாய்கள் தொல்லை தினமும் அதிகரித்து வருகிறது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 30-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இந்த அளவிற்கு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். நாய்கள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலப்பாளையத்தைச் சேர்ந்த காதர்மீரான்:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் சிலர் நாய்களை முறையாக வீட்டில் வளர்க்காமல் தெருக்களில் விட்டு விடுவதால் அந்த நாய்கள் சுகாதாரமற்ற முறையில் தெருக்களில் கொட்டப்படுகின்ற இறைச்சி கழிவுகளை சாப்பிடுகிறது. இதனால் தொற்று நோய் ஏற்பட்டு சாலையில் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பலர் அதிகளவில் நோய் தாக்கம் ஏற்பட்டு இறக்கின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் இந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்து நாய்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு இடத்தில் இருந்து ஒரு நாயை பிடித்து சென்றால் அதன்பிறகு அந்த இடத்தில் 10 நாயை கொண்டு வந்து விட்டு சென்று விடுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை பேட்டை முகம்மது அயூப்:- நாய்கள் தொல்லை என்பது முழுக்க முழுக்க நாய்களால் மட்டுமே ஏற்படுவதில்லை. அரசும், மனிதர்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நாய்கள் தொல்லை என்ற வார்த்தை இல்லாமல் ஆக்கிவிடலாம். அந்தந்த காலகட்டத்தில் தெரு நாய்களை முறையாக பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்.

பாளையங்கோட்டைகே.டி.சி.நகர் ஜெயசுதா:- பாளையங்கோட்டை பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்கள் ஒன்று சேர்ந்து தெருவில் செல்கின்ற நபர்களை கடித்து குதறி விடுகின்றன. இதனால் பலர் காயம் அடைந்து உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த நாய்களை பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டில் நாயை வளர்த்துவிட்டு வெளியே விடுகின்ற நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சத்துடன் செல்கிறார்கள்

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ்:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகப்படியாக சுற்றித்திரிகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கிறார்கள். சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த காசிலிங்கம்:- தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், குழந்தைகள் தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வந்தது. தற்போது அது நடைபெறாததால் தெரு நாய்கள் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

நாய்கள் துரத்துகிறது

தென்காசி வடக்கு மவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா:- எங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்லும்போது நாய்கள் துரத்துகின்றன. வீட்டில் வளர்த்து வரும் ஆடு, கோழிகளை கடித்து குதறுகிறது. சுமார் 25 நாய்கள் இந்த பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூட வாகனத்தின் பின்னாடியே நாய்கள் குறைத்துக் கொண்டே ஓடி வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story