வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளி:
கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்ைச மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் திறப்பு அளவு குறைந்தது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் முறை பாசன முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் முழு அளவில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயிர்கள் கருகி வந்த நிலையில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அதிக அளவில் காணப்பட்ட மக்கள் கூட்டம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 6,550 கன அடியும், வெளியேறும் தண்ணீரின் அளவு 6,503 கன அடியாக உள்ளது.மேட்டூர் அணையில் நீர் இருப்பு 15,703 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையின் நீர்மட்டம் 46.54 அடியாக குறைந்து உள்ளது.வழக்கம் போலவிடுமுறை நாளான நேற்று கல்லணையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.