பட்டாசு பதுக்குவது தொடரும் நிலை


பட்டாசு பதுக்குவது தொடரும் நிலை
x

சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்குவது தொடரும் நிலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்குவது தொடரும் நிலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

பட்டாசு தயாரிப்பு

சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உரிய அனுமதியுடன் இயங்கி வந்த 50-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பல்வேறு காரணங்களால் உற்பத்திக்கு அதிகாரிகள் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த ஆலைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலர் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்து வருவதாக கூறுப்படுகிறது. இவ்வாறு அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் சிலர் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

போலீசார் நடவடிக்கை

அனுமதியின்றி உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளுக்கும் அதிக விலை கிடைக்கிறது. அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போலீசாரும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்து உரிய மேல்நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற விதிமீறல்கள் பல நேரங்களில் விபத்துகளில் முடிந்துள்ளது. எனவே பட்டாசுகளை தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களால் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னர் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

கைது

சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்தது.

இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுபகுமார் உத்தரவின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கோபால்சாமி (வயது 58) என்பவரின் வீட்டில் பெட்டி, பெட்டியாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கோபால்சாமியை கைது செய்தனர். எனவே சிவகாசி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு பதுக்குவது தொடரும் நிலை உள்ளது. இதனை தடு்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story