செல்போன், சினிமாவில் இருந்து விலகி இருந்தால் வருங்காலத்திற்கு நல்லது


செல்போன், சினிமாவில் இருந்து விலகி இருந்தால் வருங்காலத்திற்கு நல்லது
x

மாணவ- மாணவிகள் செல்போன், டி.வி. மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருந்தால் வருங்காலத்திற்கு நல்லது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

திருப்பத்தூர்

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான 'விழுதுகளை வேர்களாக்க' எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் வரவேற்றார்.

இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

அனைவரும் புத்தகங்களை வாசிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நமக்கு கல்விதான் முக்கியம். தேர்வுகளில் பங்கேற்று தேர்வின் முடிவுகளை கண்டு பயந்து உயிர்களை மாய்த்துக் கொள்கிறார்கள். போராட்டம் இருந்தால்தான் தேர்வுகளில் ஜெயிக்க முடியும். வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்தவர்களுக்குதான் அனுபவம் அதிகம். வாழ்க்கையில் தோற்றப் பிறகு எவ்வாறு எழுந்திருப்பது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

விலகி இருங்கள்

வெற்றி, தோல்வி உங்களை முன்னேறுவதற்கு கற்றுக் கொடுக்கும். அனைவரும் தங்களது தகுதியை மதிப்பெண் தீர்மானிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை விட்டு விடுங்கள். நாம் நம்முடைய பெற்றோர்களை முன்னேற்றி காட்ட வேண்டும். திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம். நாம் வருங்காலத்தில் என்னவாக வரவேணடும் என்பதை தற்போதிலிருந்தே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் நூலகத்தை நன்கு பயன்படுத்தி அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும். மேலும் செல்போன், டி.வி., சினிமா ஆகியவற்றிலிருந்து விலகியே இருங்கள். அது உங்களின் வருங்காலத்திற்கு நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்

பின்னர் மாணவ, மாணவிகளிடம் நீங்கள் வருங்காலத்தில் என்னவாக வரவேண்டும், என்னவாக வரவேண்டாம் என்ற கருத்தை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட தாட்கோ மேலாளர் ராஜஸ்ரீ, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story