தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கருணாநிதிக்கு சிலை -தி.மு.க. அறிவிப்பு


தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கருணாநிதிக்கு சிலை -தி.மு.க. அறிவிப்பு
x

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கருணாநிதிக்கு 234 இடங்களில் சிலை நிறுவப்படும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 5-ந் தேதி அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளன. தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணியும் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும்? என்பது தொடர்பாக விரிவான விளக்க பட்டியலை தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தி.மு.க. இளைஞர் அணியினர் மாவட்ட வாரியாக பேச்சு போட்டி நடத்தி மாநில அளவில் 100 பேச்சாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை கட்சியின் சொற்பொழிவாளர்களாக மாற்ற வேண்டும். அனைத்து மாவட்டத்திலும் கருணாநிதி படிப்பகங்கள் திறக்கவேண்டும். மாவட்டம் வாரியாக மாரத்தான் ஓட்டம் நடத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அணியினர் கருணாநிதி பற்றி 'ரீல்ஸ்'களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். மாணவர் அணியினர் பள்ளி, கல்லூரி அளவில் கவியரங்கம், கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டிகள் நடத்த வேண்டும்.

தொடர் ஜோதி ஓட்டம்

மகளிர் அணியினர் அகில இந்திய அளவிலான பெண் தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடத்த வேண்டும். மகளிர் தொண்டர் அணி சார்பில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் நடத்த வேண்டும். இலக்கிய அணி சார்பில் கருணாநிதியின் படைப்புகள் குறித்து கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கம் நடத்தப்பட வேண்டும். கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டந்தோறும் காட்சிப்படுத்த வேண்டும்.

விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டம் வழியாக 100 நாட்களில் தமிழகம் முழுவதும் கருணாநிதி தொடர் ஜோதி ஓட்டம் கலைஞர் கோட்டம் செல்லும் வகையில் நடத்த வேண்டும். மாவட்ட வாரியாக விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வர்த்தகர் அணி சார்பில் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, வேலூரில் கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

கருணாநிதி சிலை

அயலக அணி சார்பில் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கருத்தரங்கம், சுற்றுச்சூழல் அணி சார்பில் கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்படும் மாவட்டங்களில் 1,000 மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடு செய்ய வேண்டும். நெசவாளர் அணி சார்பில் நெசவாளர் விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி நடத்த வேண்டும். மீனவர் அணி சார்பில் கடலோர மாவட்டங்களில் உள்ள கட்சியின் அமைப்புகளில் குறை தீர்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தலைமைக்கழகம் கருணாநிதியின் வரலாற்று குறிப்புகள் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பினை முப்பெரும் விழாவுக்கு முன்பு நூலாக்க வேண்டும்.

மாவட்ட கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 புதிய இடங்களில் கொடி கம்பங்கள் நிறுவப்படுவதை உறுதி செய்யவேண்டும். மாவட்ட செயலாளர்கள் மூலம் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கருணாநிதி சிலை நிறுவுவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி, 234 சிலைகளை வைப்பதற்கான இடங்களையும், தேதியையும் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காட்சியில் கருணாநிதியுடன் 'செல்பி' எடுக்கும் வகையில் மாதிரி சிலை வைக்க வேண்டும்.

கருணாநிதி சிலையுடன் எடுத்த சிறந்த படத்தை தேர்வு செய்து பரிசு வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.


Next Story