மாநில துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம்


மாநில துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம்
x

மாநில துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது.

திருச்சி

மாநில துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர் செல்வன், பொருளாளர் சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தேசிய ரைபிள் சங்க கவுரவ செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார்.

வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள்

தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலாளர் வேல்சங்கர் போட்டிகளை பற்றி விளக்கி கூறினார். இதில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உஉட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு வருகிற 28-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று கமிஷனர் கார்த்திகேயன் கூறினார். முன்னதாக துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கலெக்டர், கமிஷனர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை பார்த்தனர்.


Next Story