சத்திரப்பட்டியில் முளைக்கொட்டு திருவிழா


சத்திரப்பட்டியில் முளைக்கொட்டு திருவிழா
x

சத்திரப்பட்டியில் நடைபெற்ற முளைக்கொட்டு திருவிழாவில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சத்திரப்பட்டியில் நடைபெற்ற முளைக்கொட்டு திருவிழாவில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

முளைக்கொட்டு திருவிழா

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நெசவுத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைக்கொட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்தப்பட்டது. இதையொட்டி சத்திரப்பட்டி புது தெரு, வடக்கு தெரு, நடுத்தெரு, கீழ மேல் பகுதி போன்ற பகுதிகளில் முளைக்கொட்டு திருவிழா நடைபெற்றது.

கும்மி அடித்து வழிபாடு

இப்பகுதியில் அமைந்துள்ள செல்வமுளை மாரியம்மன், யோக மாரியம்மன், முளை மாரியம்மன் கோவில் களில் முளைப்பாரிகளுடன் பெண்கள் கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அனைத்து கிராமங்கள் வழியாக அனைத்து தெருக்களை சுற்றி முளைப்பாரிகளுடன் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர். நத்தம்பட்டி சாலையில் உள்ள துரைமடம் அருகே உள்ள கிணற்றில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன.

தொழிற்சாலைகளுக்கு விடுமுறை

முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு அனைத்து மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர். ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரித்தி தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story