பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
x

பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட அளவில் புதிய விளையாட்டு போட்டிகளான ஜிம்னாஸ்டிக், டேக்வாண்டோ, வாள்வீச்சு, ஸ்குவாஷ் மற்றும் நீச்சல் ஆகிய போட்டிகள் நேற்று தனித்தனியாக நடத்தப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டேக்வாண்டோ, வாள்வீச்சு போட்டிகளில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்குவாஷ் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நீச்சல் போட்டிகளில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் ெவன்று, அதிக பதக்கங்களை குவித்தனர்.

பதக்கங்கள்

போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் வழங்கினார். மேலும் இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான ஏற்பாடுகளை லெப்பைக்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

நாளை மறுநாள்(திங்கட்கிழமை) 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான லாங் டென்னிஸ், வளையப்பந்து, கேரம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.


Next Story