சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

அபிராமி அம்மன் கோவில்

பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி மாலை 4.30 மணியளவில் கோவில் கொடிமரம் மற்றும் நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி வலம் வருதல், மகா தீபாராதனை நடைபெற்றது.

வெள்ளிமலை சிவன்

இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மேலும் திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் சுந்தரேசுவரருக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், பால், தயிர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சுந்தரேசுவரரின் எதிரில் வீற்றிருக்கும் நந்தீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் பெண் பக்தர்கள் விளக்கு ஏற்றி நந்தீஸ்வரரை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கைலாசநாதர் கோவில்

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வைகாசி மாத சிவராத்திரி, பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர்களால் நந்தி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூைஜ நடந்தது. கபாலீசுவரர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story