அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெய்தீபம் ஏற்றி வழிபாடு

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் எலுமிச்சை பழத்தோலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல் திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அப்போது பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் புனவாசலில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடிமாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பால் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சக்தி கரகம், அக்னி கப்பரை, சாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோவிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சுமங்கலி திருவிளக்கு பூஜையும், நாதஸ்வர இன்னிசையுடன் சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடவாசல்

குடவாசல் அருகே உள்ள கடலங்குடியில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், ஆகிவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சீதக்கமங்கலம் பிரமாணி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நடைபெற்றது.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை மகா மாரியம்மன் கோவிலில் ஹோமத்துடன் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாமாரியம்மன் சாமி வீதிஉலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர், உபயதாரர்கள் செய்திருந்தனர். பொன்னியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story