ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி
மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தில், அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் நடத்துவர். இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஜெய் மாருதி ஞானபீடம் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9.30 மணிக்கு 1008 தேங்காய் கொண்டு ஆஞ்சநேயர் ஹோமமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ராமர் சீதா திருக்கல்யாண வைபவம் நடந்தது.
காட்டுராமர் கோவில்
நெல்லை அருகன்குளம் காட்டுராமர் கோவிலில் காலை 8.30 மணிக்கு சிறப்பு ஹோமமும், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 12-30 மணிக்கு மகாதீபாராதனையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. சிறப்பு அபிஷேகத்திற்கான கும்பம் யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள ராமதூதபக்த ஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாரதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து பழ அலங்காரமும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.
நெல்லை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் காலையில் சிறப்பு ஹோமமும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும், வாழவந்த அம்மனுக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும், புஷ்பங்கி சேவையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
இதேபோல் நெல்லையில் ஆஞ்சநேயர் கோவில்களிலும், பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.
வள்ளியூர்- அம்பை
வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பன்னீர், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் வெண்ணெய் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இதபோல் அம்பை காசிநாதர் கோவிலின் மேல்புறம் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில், முக்கூடல் தெற்கு ராமசாமி கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.