தீபாவளியன்று கங்கையில் புனித நீராட செல்பவர்களுக்கு சிறப்பு ரெயில்


தீபாவளியன்று கங்கையில் புனித நீராட செல்பவர்களுக்கு சிறப்பு ரெயில்
x

தீபாவளியன்று கங்கையில் புனித நீராட செல்பவர்களுக்கு சிறப்பு ரெயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்படுகிறது

மதுரை,

தீபாவளிக்கு கங்கையில் நீராட விரும்புபவர்களுக்காக ராமநாதபுரத்தில் இருந்து ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 9 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு சுற்றுலா ரெயிலில், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னையில் இருந்து பயணம் செய்ய முடியும்.

இந்த சுற்றுலா ரெயில் (வ.எண்.22613) அடுத்த மாதம் 28-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 29-ந் தேதி இரவு 10.10 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடைகிறது. 31-ந் தேதி அதிகாலை கங்கையில் புனித நீராடவும், காசி விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 1-ந் தேதி கயாவுக்கு சென்று புத்தகயாவில் தரிசனம், 2-ந் தேதி விஷ்ணு பத் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு வாரணாசி செல்கிறது. 3-ந் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸ் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 5-ந் தேதி இரவு 10.10 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இதில் தனி நபர் அறை முதல் 3 பேர் தங்கும் அறை வரை தேர்வு செய்யும் வசதி உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட இந்த ரெயிலில் காலை, மதியம் மற்றும் இரவு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். ஓட்டல்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்குவதற்கான ஏற்பாடும், சுற்றிப்பார்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பஸ்களும் இந்த பிரயாணத்துக்கான டிக்கெட் கட்டணத்தில் அடங்கும்.

72 இருக்கைகள் மட்டுமே இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். ரெயில்வே விதிப்படி பயணத்தை ரத்து செய்யும் வசதி உள்ளது. இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story