முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 5 Feb 2023 7:30 PM GMT (Updated: 5 Feb 2023 7:30 PM GMT)
சேலம்

தைப்பூசத்தையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழா

முருக பெருமானுக்கு உகந்த நாள் தைப்பூசம் ஆகும். ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் தைப்பூச விழாவாகும்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு தைப்பூச விழாவையொட்டி நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காவடி பழனியாண்டவர்

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு காவடி பழனியாண்டவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பழனியாண்டவருக்கு தங்ககவசம் அணிவித்து பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு வேண்டுதலை நிறைவேற்ற சில பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.

பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாலையில் தீர்த்தக்குட ஊர்வலமும், இரவில் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அழகாபுரம் முருகன் கோவில்

இதேபோன்று சேலம் அழகாபுரம் முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் குமரகிரி பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஊத்துமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி முருகனை வழிபட்டனர். மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.

கந்தாஸ்ரமம்

சேலம் அருகே கந்தாஸ்ரமத்தில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கந்தாஸ்ரமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோன்று சேலம் பாவடி கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், வின்சென்ட் முத்துக்குமார சுவாமி, அடிவாரம் அறுபடை முருகன் கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசாமி கோவில் உள்பட சேலம் மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை

தைப்பூசத்தை ஒட்டி சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தைப்பூசத்தை ஒட்டி சேலம் கிச்சிப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

146 அடி உயர முருகன் கோவில்

ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முத்து மலைமுருகன் சுவாமி கோவில் உள்ளது. சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி கோவிலில் உள்ள மூலவர் சுவாமி பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் 146 அடி உயரம் கொண்ட முருகன் கையில் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். மேலும் பக்தர்கள் கோவிலின் அருகே அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள முருகனையும் வழிபட்டனர்.

ஆத்தூர், சேலம், நாமக்கல், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தும்பல், கருமந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் முத்துமலை முருகன் கோவிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில்

தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.

பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடி முருகப்பெருமானை வழிபட்டனர். மேலும் நேர்த்திக்கடனாக பல்வேறு வகையான காவடி எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வந்து இருந்த பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவாசல், ஆத்தூர் மட்டும் அல்லாமல் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பல்வேறு இடங்களில்...

இதுதவிர தலைவாசல் அருகே ஈச்சம்பட்டி பாலமுருகன் கோவில், வரகூர் முருகன் கோவில், ஊனத்தூர் முருகன் கோவில், சர்வாய் முருகன் கோவில், வெள்ளையூர் முருகன் கோவில், வீரகனூர் குமரன் மலை உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா நடந்தது. இ்ந்த கோவில்களில் நடந்த சிறப்பு அபிஷேகம், தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகுடஞ்சாவடி

மகுடஞ்சாவடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் இளம்பிள்ளை, இடங்கணசாலை, மடத்தூர், சின்னப்பம்பட்டி, சித்தர் கோவில், மகுடஞ்சாவடி, கசப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story