காரைக்குடிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


காரைக்குடிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2023 7:15 PM GMT (Updated: 28 July 2023 7:15 PM GMT)

காரைக்குடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வசதிகளை சுற்றுலாத்துறை சார்பில் செய்துகொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த வசதிகளை சுற்றுலாத்துறை சார்பில் செய்துகொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செட்டிநாடு

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி பிரதான கட்டிடக்கலைகள், அரண்மனை தோற்றம் கொண்ட வீடுகள், ஆன்மிக ஸ்தலங்கள், செட்டிநாட்டு பாரம்பரிய உணவு வகைகள், அறுசுவை மிக்க பலகாரங்கள், கலைக்கோவில்கள், வியப்பூட்டும் வகையில் உள்ள வீடுகள் என பல்வேறு சிறப்பு அம்சம் கொண்டதாக உள்ளது. நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இந்த வீடுகளை பார்த்து வியந்து செல்கின்றனர். இதுதவிர ராமேசுவரம் செல்லும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இந்த பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதியில் உள்ள கட்டிடக்கலைகள், பாரம்பரிய உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைப்பதற்கு இந்த பகுதியை சேர்ந்த சுற்றுலாத்துறையினர் இல்லாததால் அவர்களுக்கு போதியளவில் விவரங்கள் கிடைக்காமல் செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள்

இதுதவிர இந்த பகுதியில் சிறந்து விளங்கும் கைத்தறி பட்டுபுடவைகளின் ரகம், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவைகள் குறித்த விவரமும் சுற்றுலா பயணிகளுக்கு போதியளவில் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக இப்பகுதியில் வியாபாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றமும் அடைய எவ்வித தூண்டுகோலும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளரும், சமூக ஆர்வலருமான கானாடுகாத்தான் வெங்கட்ராமன் கூறியதாவது:- காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியாக உள்ள கானாடுகாத்தான், ஆத்தங்குடி உள்ளிட்ட பகுதியில் பிரமாண்ட வீடுகள் உள்ளது. தினந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்து விளக்குவதற்கு உள்ளூரை சேர்ந்த சுற்றுலாத்துறை கைடுகள் இல்லாததால் போதிய விவரங்களை அவர்களுக்கு எடுத்துரைக்க முடியவில்லை.

உள்ளூர் சுற்றுலா கைடுகள்

இதுதவிர கானாடுகாத்தான், காரைக்குடி பகுதியில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் இந்த கைத்தறி ஆடைகள் குறித்தும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் சுற்றுலாத்துறை சார்பில் கைடுகள் மூலம் இந்த சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுத்தால் இங்குள்ள கலாசாரத்தையும், நெசவாளர்களின் புடவைகள் குறித்தும் சுற்றுலா பயணிகள் நன்கு அறிந்து இந்த பகுதியில் வியாபாரமும் அதிகரிக்கும். எனவே மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story