சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு


சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக  வைகை அணையில் தண்ணீர் திறப்பு
x

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காகவும் வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் வழியாக திறக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தண்ணீர் திறக்கப்பட்டபோதும் பலத்த மழை மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தண்ணீர் திறப்பு

இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று மாலை முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறந்துவிடப்பட்டு உள்ளது. இதில் அணையின் சிறிய மற்றும் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3 ஆயிரம் கனஅடி, பாசனத்திற்கு 900 கனஅடி, மதுரை, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு 69 கனஅடி என மொத்தமாக வினாடிக்கு 3 ஆயிரத்து 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் இரு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் குடிநீர் தேவைக்காக முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்த 3 நாட்களில் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.


Next Story