சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
x

துப்புரவு பணிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யூ. அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

துப்புரவு பணிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யூ. அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

அரசாணை

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 48 வார்டுகள் உள்ள நிலையில் இங்கு சேரும் குப்பைகளை சரியான முறையில் அகற்றப்படவில்லை என 30-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தின் போது தொடர்ச்சியாக புகார் கூறி வந்தனர்.

போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தான் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் கொடுத்து வந்தனர். இந்தநிலையில் தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரும் குப்பைகளை தனிநபர் மூலம் அகற்றும் அரசாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்புரவு பணி

இந்தநிலையில் இதற்கும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த அரசாணையால் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

துப்புரவு பணி உள்ளிட்ட இதர பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152, 139, 115-ஐ திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்கின்ற அனைத்து பிரிவு ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

முற்றுகை

தூய்மை பணியாளர்களை நலவாரியத்தில் இணைத்து நலவாரிய சலுகைகள் முழுமையும் கிடைக்க செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பால்ராஜ், சங்கர், மூர்த்தி, கருப்பசாமி, தேவர், செல்லச்சாமி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 30 நிமிடம் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


Next Story