தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் முற்றுகை


தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் முற்றுகை
x

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

தலைமை ஆசிரியை

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு உயர்நிலைபள்ளியில் மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை ஷர்மிளாவை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பாலசுப்பிரமணி மற்றும் திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இடமாற்றம்

அப்போது பெற்றோர்கள் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர் செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்த தலைமை ஆசிரியர் ஷர்மிளாவை இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மாதம் ஒரு முறை பெற்றோர்களை அழைத்து பள்ளியில் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story