வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை


வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2023 6:45 PM GMT (Updated: 16 March 2023 6:47 PM GMT)

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த குருவிக்கார சமூகத்தினர் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் செல்வராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட கன்வீனர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோபுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரத்தில் மன்னர் ஆட்சிக்காலத்தில், விவசாய பருவத்தில் பயிர்களை சேதப்படுத்தும் சிறகு பறவைகளை பிடிக்க மலையில் வாழ்ந்த பல சிட்டுக்குருவிகள் குடும்பங்களை வரவழைத்து விவசாயத்தை காக்க சிட்டுக்குருவிகளை கூலிக்கு அமர்த்தினார் மன்னர் சேதுபதி. நாங்கள் வாழ்ந்த பகுதி இப்போது ஊரில் குருவிச்சார் தெரு என்று அழைக்கப்படுகிறது. இதன்பின்னர் எங்கள் சமுதாய மக்கள் பல்வேறு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கின்றனர். எங்களின் சாதியை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்காமல் வேறு சாதியை போட்டு சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் எங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தற்போது நாடாளுமன்றத்தில் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு சட்டப்பூர்வ அடிப்படையில் சட்டம் வழங்குவதற்கான சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எங்களுக்கு குருவிக்காரர் சாதி சான்று வழங்க வேண்டும். எங்களின் குழந்தைகளும் நன்றாக படித்து அதிகாரிகளாக அமர வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story