கோர்ட்டு ஆணையை அலுவலக உத்தரவு போன்று அதிகாரிகள் கருதுவதா?- கிரிமினல் நடவடிக்கை பாயும் என நீதிபதி எச்சரிக்கை


கோர்ட்டு ஆணையை அலுவலக  உத்தரவு போன்று அதிகாரிகள் கருதுவதா?- கிரிமினல் நடவடிக்கை பாயும் என நீதிபதி எச்சரிக்கை
x

கோர்ட்டு ஆணையை அலுவலக உத்தரவு போன்று அதிகாரிகள் கருதுவதா? என கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பாக கிரிமினல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

மதுரை


கோர்ட்டு ஆணையை அலுவலக உத்தரவு போன்று அதிகாரிகள் கருதுவதா? என கண்டனம் தெரிவித்த நீதிபதி, இதுதொடர்பாக கிரிமினல் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

வாரிசு வேலை கேட்டு வழக்கு

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் கருப்பையா, கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி உயிரிழந்தார். அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களையும், வாரிசு அடிப்படையில் பணியும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, மனுதாரரின் கணவர் 427 நாட்கள் பணியாற்றி உள்ளார். எனவே அவரை நிரந்தர பணியாளராகத்தான் கருத வேண்டும். அத்துடன் அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்கி, வாரிசு அடிப்படையில் வேலை வழங்க 4 வாரத்திற்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே ேகார்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அலுவலக உத்தரவு போல்...

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

விசாரணை முடிவில், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற 3 வருடம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் பணியாளர் விதிகளை வரன்முறைப்படுத்துங்கள். அவர்களுக்கான பணப்பலன்கள் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். கோர்ட்டு உத்தரவை ஏதோ அலுவலக உத்தரவு போல அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் அதனை மதிக்காமல் இருக்கலாம். ஆனால் கோர்ட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் கோர்ட்டுகளின் நோக்கம். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடலாம் என எச்சரித்ததோடு, 2 நாட்களுக்குள் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.


Next Story