தொடர்மழையால் ஆட்டுக்கிடை போடும் தொழிலாளர்கள் அவதி


தொடர்மழையால் ஆட்டுக்கிடை போடும் தொழிலாளர்கள் அவதி
x

தொடர்மழையால் ஆட்டுக்கிடை போடும் தொழிலாளர்கள் அவதி

தஞ்சாவூர்

தஞ்சை பகுதியில் ஆட்டுக்கிடை போடும் தொழிலாளர்கள் தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் மழைநீர் தேங்காத இடம்தேடி அலைந்த வண்ணம் உள்ளனர்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர வாழை, கரும்பு, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், நிலக்கடலை, எள், உளுந்து, பருத்தி, பூச்செடிகள், வெள்ளரிக்காய், பரங்கிக்காய் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மோட்டார்பம்புசெட் உள்ள பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும் என்பதால் குறுவை சாகுபடி பணிகளும் அதிகஅளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுவை ஆயத்த பணிகள்

இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மண்வளத்தை அதிகரிக்க செய்யும் வகையில் ஆடு மற்றும் மாடு கிடைகள் போடப்பட்டு வருகின்றன. இதற்காக ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆடு மற்றும் மாடுகளை கொண்டு வந்த கிடை போட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஆடுகளை தான் கிடையாக போட்டு வருகின்றனர்.

வயல்களை சுற்றிலும் மூங்கில்களை கொண்டு அடைப்புகளை ஏற்படுத்தி அதன் உள்ளே ஆடுகளை கிடை போடுகின்றனர். குட்டி ஆடுகளை அடைப்பாக தனியாக ஓலை கொட்டகைகையும் எடுத்துச்செல்கிறார்கள். ஒவ்வொருவரும் 300 முதல் 500 ஆடுகள் வரை வைத்துள்ளனர். இவர்கள் அறுவடை செய்த வயல்களில் விவசாயிகள் காட்டும் இடங்களில் கிடைகள் போட்டு வருகின்றனர்.

ஆடு கிடை போடும் தொழிலாளர்கள்

பெரிய வயல்களாக இருந்தால் 3 முதல் ஒருவாரம் வரையும், சிறிய வயல்களாக இருந்து ஒன்று அல்லது 2 நாட்கள் மட்டும் கிடை போட்டு வருகின்றனர். இதற்காக கிடை போட்டு வருபவர்களிடம் ஒரு நாளைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை விவசாயிகள் கொடுக்கிறார்கள். ஆடுகளில் எண்ணிக்கையை பொருத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, பூதலூர், சீராளூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்டவர்கள் ஆடுகளை கிடை போட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிடை போட்டு வரும் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஆடுகள் கிடைகளில் தங்குவது இல்லை. வயல்களை விட்டு தண்ணீர் தேங்காத இடம் மற்றும் ஈரம் இல்லாத இடமாக பார்த்து ஓதுங்குகின்றன.

மழைநீர் தேங்கியதால் அவதி

பெரும்பாலான ஆடுகள் வரப்புகளில் சென்று தஞ்சம் அடைகின்றன. இதனால் ஆடுகள் கிடை போட்டு வரும் தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் மேட்டு பகுதியிலும், மழைநீர் தேங்காத பகுதியையும் தேடி அலையும் நிலையில் உள்ளனர். மேலும் தற்போது வயல்களில் தேங்கி உள்ள தண்ணீர் வடிந்து காய்வதற்கு ஒரு வாரம் ஆகும் என்பதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இது குறித்து ஆடுகள் கிடை போடும் தொழிலாளியான ராமநாதபுரம் மாவட்ட பூஞ்சேரி பகுதியை சேர்ந்த கலைமுருகன் கூறுகையில், நாங்கள் குடும்பத்துடன் வந்து ஆடுகள் கிடை போட்டு வருகிறோம். ஏதாவது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள் என்றால் ஊருக்கு செல்வோம். மற்ற நாட்களில் ஊர், ஊராக சென்று கிடை போடுவது தான் எங்கள் தொழில். ஆடுகள் வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

வேறு இடம் தேடும் நிலை

கும்பகோணம், தாராசுரம், திருவிடைமருதூர் பகுதிகளில் கிடை போடுவதற்கு ஒரு நாளைக்கு ரூ.500 வரை கொடுத்தனர். ஆனால் பூதலூர், ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, பகுதிகளில் ரூ.300 வரை கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் ஆடுகள் கிடைகளில் தங்குவதில்லை. தண்ணீர் இல்லாத மேடான பகுதி அல்லது வரப்பு பகுதிக்கு சென்று விடுகின்றன. இன்னும் ஓரிரு நாட்கள் பார்ப்போம். மழை பெய்யாவிட்டால் இந்த பகுதிகளில் கிடை போடுவோம். மழை பெய்தால் வேறு பகுதியை தேடி செல்ல வேண்டியது தான் என்றார்.


Related Tags :
Next Story