தர்மபுரி மாவட்ட கலெக்டராக சாந்தி பொறுப்பேற்பு


தர்மபுரி மாவட்ட கலெக்டராக சாந்தி பொறுப்பேற்பு
x

தர்மபுரி மாவட்ட கலெக்டராக சாந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டராக சாந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

புதிய கலெக்டர்

தர்மபுரி மாவட்ட புதிய கலெக்டராக சாந்தி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கலெக்டர் சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனராக பணிபுரிந்த நான், தற்போது தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று உள்ளேன். நமது மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பொது மக்களின் மேம்பாட்டுக்காக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர் ஆய்வு

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறும் பணிகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும். அங்கு வழங்கப்படுகிற அரசின் சேவைகள் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் காலதாமதமின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின்சேவைகள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எந்த ஒரு தனிநபரும் விடுபடாத வகையில் அரசின் நலத் திட்டங்களை முழுமையாக கொண்டு சென்று தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் திட்டங்களின் பயன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

45- வது கலெக்டர்

தர்மபுரி மாவட்டத்தின்45- வது கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சாந்தி, மாவட்டத்தின் 7-வது பெண் கலெக்டர் ஆவார். இவர் இதற்கு முன்பு நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னையில் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் சேலம் பட்டு வளர்ச்சித் துறையின் இயக்குனராக பணிபுரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story