மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 20 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை மாவட்ட அளவிலான மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 20 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 900-ம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி (பொ)சுந்தரராஜ் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
20 வழக்குகளுக்கு தீர்வு
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 54 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 33 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 7 காசோலைகள் வழக்குகளும் என மொத்தம் 94 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 5 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.
அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 135 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 15 வழக்குக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.88,900-வரையில் வங்கிகளுக்கு வரவானது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.