மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த தகவல்கள் பெற சேவை மையம்


மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த தகவல்கள் பெற சேவை மையம்
x

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த தகவல்கள் பெற சேவை மையம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வருகிற நாளை (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்காக 2 கட்டங்களாக சிறப்பு முகாம்களும், விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் அளித்தனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 682 பேர் அதாவது 73 சதவீதம் பேர் விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களில் தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்களுக்கு முதல்கட்டமாக அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வரப்பெற்றுள்ளது. இதுவரை சுமார் 6 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரப்பெற்றுள்ளன. அந்த கார்டுகள் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

குறுந்தகவல்

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான அனைவருக்கும் தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தநிலையில் முதல்கட்டமாக ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளது. அந்த கார்டுகளை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

யார் பயனாளிகள் என்ற பட்டியல் எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை. குறுந்தகவல் மூலம் மட்டுமே தற்போது பயனாளிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சேவை மையம்

குறுந்தகவல் வரவில்லை என மக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. எனவே அதை நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஓரிரு நாட்களில் கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story