சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு


சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு
x

சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர் மின்வெட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட அகனி, ராமாபுரம், வள்ளுவக்குடி, மருதங்குடி, ஆலஞ்சேரி, நிம்மேலி, புங்கனூர், கருகுடி, கொண்டல், கஞ்சிகுடி, அகரஎலத்தூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீர்காழி பகுதியில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குறுவை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டும், இதுவரை சீர்காழி பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் பம்பு செட்டு மூலம் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

முற்றுகை போராட்டம்

தண்ணீர் பாய்ச்ச முடியாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டால் சீர்காழியில் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story