மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்


மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று ஆசிரியர்களுக்கு உள்துறை செயலாளர் பி.அமுதா அறிவுரை வழங்கினார்.

கோயம்புத்தூர்

கோவை

சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று ஆசிரியர்களுக்கு உள்துறை செயலாளர் பி.அமுதா அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு கையேடு வெளியீடு

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை விபத்துகளை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உயிர் அமைப்பு மூலம் குட்டி காவலர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 460 பள்ளிகளில் படித்து வரும் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தில் இணைந்து உள்ளனர். சாலை விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஆசிரியர் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று காலை நடந்தது. இதில் தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா கலந்து கொண்டு விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். அதை கலெக்டர் கிராந்திகுமார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து உள்துறை செயலாளர் அமுதா பேசியதாவது:-

எடுத்துச்செல்ல வேண்டும்

குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குட்டி காவலர் என்ற சாலை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு பல்வேறு வகையில் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏறுபடுவதிலும் முதன்மை மாநிலமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 100 விபத்துகள் ஏற்பட்டால் அதில் 26 பேர் உயிரிழப்பு என்ற நிலை இருக்கிறது. கோவை மாவட்டத்தில் அது 30 என்று இருக்கிறது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்கத்தான் உயிர் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள குழந்தைகள் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வை எடுத்துச்செல்வதன் மூலம் பெற்றோர், உறவினர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதனால் விபத்துகள் குறையும்.

ஹெல்மெட் அணிவது இல்லை

இருசக்கர வாகனங்கள்தான் அதிகளவில் விபத்துகளில் சிக்குகின்றன. 40 சதவீதம் விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் நடைபெறுகிறது. அனைவரின் வீட்டிலும் ஹெல்மெட் இருக்கிறது. ஆனால் அதை அணிவது இல்லை. அவ்வாறு செய்தால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தே நாம் அணிவது கிடையாது.

குழந்தைகளுக்கு நாம் பலவற்றை கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் அதை நாம் கடைபிடிப்பது இல்லை. சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் அதை குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்ளும். ஆனால் சொல்லும் செயலும் வெவ்வேறாக இருந்தால் அது கண்டிப்பாக செயல்படுத்த முடியாது. அதுபோன்று ஆசிரியர்களும் அதை கடைபிடித்து முன்மாதிரியாக இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும்.

போக்குவரத்து விதிகள்

சாலை விபத்தில் கவனக்குறைவாக நடக்கும் விபத்துகள்தான் அதிகம். முக்கியமாக டிரைவரின் கவனக்குறைவு காரணமாகதான் விபத்துகள் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் நடந்த மொத்த விபத்துகளில் 90 சதவீதம் டிரைவர்களின் கவனக்குறைவுதான் காரணமாக இருக்கிறது. சாலை, சிக்னல்களில் ஏற்பட்டு உள்ள பழுதை நாங்கள் சரிசெய்து கொள்கிறோம். நீங்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது, காரில் சீட்பெல்ட் போடுவது, உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சிறுவயதிலேயே இந்த திட்டம் குறித்து சொல்லிக்கொடுக்கும்போது அவர்கள் வளர்ந்த பின்னர் அதை எளிதாக கடைபிடிப்பார்கள். அத்துடன் வருங்கால சந்ததியினருக்கும் சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் அதை சொல்லிக்கொடுக்கும் நீங்கள் முதலில் அதை கடைபிடிப்பதுடன் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போக்குவரத்து துறை இணை இயக்குனர் சிவகுமரன், உயிர் அமைப்பு தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், மலர்விழி, மோகன், சந்திரசேகர், ரவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story