தொழில்நுட்ப பயிற்சி மையமாக மதுரை மருத்துவ கல்லூரி தேர்வு


தொழில்நுட்ப பயிற்சி மையமாக மதுரை மருத்துவ கல்லூரி தேர்வு
x

தொழில்நுட்ப பயிற்சி மையமாக மதுரை மருத்துவ கல்லூரி தேர்வு

மதுரை

தேசிய மருத்துவ ஆணையத்தின், மருத்துவ கல்வி தொழில்நுட்ப பயிற்சிக்கான மண்டல மையமாக மதுரை மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான தொடக்க விழா மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. தேசிய மருத்துவ ஆணைய தலைவர் அருணா வனிகர், தேசிய மருத்துவ ஆணையத்தின் நிரந்தர உறுப்பினர் விஜயேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டு மண்டல மையம் மற்றும் பயிற்சியை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் டாக்டர்கள், மருத்துவ முதுநிலை மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், துறை தலைவர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-

தேசிய மருத்துவ ஆணையத்தின் சார்பில், மருத்துவ கல்வி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கடந்த 5,6 வருடங்களாக தமிழகத்தின் பயிற்சி மையமாக வேலூர் மட்டுமே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சென்னை மற்றும் மதுரை மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவ கல்லூரிக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு கடந்த 1 வருடங்களாக பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விளைவாகவே அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 10 மருத்துவ கல்லூரிகளில் மட்டுமே இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில், மதுரையும் ஒன்றாகும். இதன் மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், தேனி, கரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கோவை, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், ஈரோடு, திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகளும், மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோவை கே.எம்.சி.எச். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் அன்ட் ரிசர்ச், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 19 மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், மதுரை மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், 19 மருத்துவ கல்லூரி மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவார்கள். இந்த பயிற்சியானது 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story