மாட்டு தீவனம் தயாரிக்க பதுக்கிய 5 டன் ரேஷன்அரிசி பறிமுதல்


மாட்டு தீவனம் தயாரிக்க பதுக்கிய 5 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
x

திண்டுக்கல் அருகே மாட்டு தீவனம் தயாரிக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 டன் ரேஷன்அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

ரேஷன்அரிசி பதுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள குரும்பபட்டியில் ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் குரும்பபட்டிக்கு விரைந்தனர். அங்கு ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு தேடினர்.

அப்போது மாட்டு தீவனம் தயாரிக்கும் அரவை மில்லில் மூட்டை மூட்டையாக ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு 101 மூட்டைகளில் 4 டன் 600 கிலோ புழுங்கல்அரிசி, 20 மூட்டைகளில் 800 கிலோ பச்சரி என மொத்தம் 5 டன் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது.

இந்த அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து உள்ளனர். பின்னர் மக்காசோளம் உள்ளிட்ட பிற தானியங்களுடன் ரேஷன்அரிசியை கலந்து மாட்டு தீவனம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 42), என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ரமேஷ்ராஜா (29), சுக்காம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (37), நாகல்நகரை சேர்ந்த சேவியர் ராஜேஷ்கண்ணன் (47) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாட்டு தீவனம் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த ரேஷன்அரிசி, ரேஷன்அரிசியை கடத்தி வர பயன்படுத்திய மினிவேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story