மதவாதத்தை வீழ்த்த முதல் ஆளாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிற்கும்; மாநில தலைவர் பேட்டி


மதவாதத்தை வீழ்த்த முதல் ஆளாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிற்கும்; மாநில தலைவர் பேட்டி
x

மதவாதத்தை வீழ்த்த முதல் ஆளாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிற்கும் என்று மாநில தலைவர் கூறினார்.

திருச்சி

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமோ? அவ்வாறு இந்தியா கூட்டணி செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பா.ஜ.க.வின் ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. அவர்கள் இதை வீரியமாக கொண்டு செல்லவில்லை. பா.ஜ.க.வின் தவறுகளை எதிர்க்கட்சிகள் பேசாமல் இருப்பதற்காக ஏஜென்சிகளை கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு தான் பயணிக்க வேண்டும்.சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமித்ததில் சமூகநீதி கண்ணோட்டத்தில் செயல்பட்டதாக தி.மு.க. தெரிவிக்கிறது. இதில் எந்தவகையில் சமூகநீதி பின்பற்றப்பட்டது என தெரியவில்லை. சைலேந்திரபாபுவைவிட திறமையானவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நாட்டில் மதவாதம் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு முதல் ஆளாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிற்கும்.பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஆகவே நாடாளுமன்ற தேர்தல் வரும்போது எஸ்.டி.பி.ஐ. கட்சி சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்து மிகத்தீவிரமான களப்பணியாற்றுவோம். வேளாண்மையை காப்பாற்றாவிட்டால் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியாது. இதை மத்திய-மாநில அரசுகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் டி.வி.எஸ்.டோல்கேட் அருகே நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் முகமதுஇல்யாஸ்தும்பே சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர்பாரூக், மாநில துணைத் தலைவர்கள் ரபீக்அகமது, அப்துல்ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்பட 25 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story