பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாசரேத்
நாசரேத் காவல்துறை மற்றும் புனித லூக்கா செவிலியர் கல்லூரி இணைந்து உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஊர்வலம் நடை பெற்றது. இந்த ஊர்வலத்தை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தொடங்கி வைத்தார். நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராய்ட்சன், செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஊர்வலம் காமராஜர் பஸ் நிலையத்தில் தொடங்கி, புனித லூக்கா செவிலியர் கல்லூரி வரை நடந்தது. ஊர்வலத்தில் கல்லூரி முதல்வர் சோபியா செல்வ ராணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்
ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுக்கு இடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பள்ளி நிர்வாக அதிகாரி கந்தசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சித் சிங் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தட்டார்மடம்
கொம்மடிக்கோட்டை சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தட்டார்மடம் காவல் நிலையம், பெரியதாளை மது விலக்கு பிரிவு மன்றம் ஆகியவை இணைந்து தட்டார்மடத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். இதில் சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பெரியதாளை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரியத்தாளை பங்குத்தந்தை சுசீலன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், கல்லூரி துணை முதல்வர் மகேஷ் குமார், நாட்டு நலப்பணி அணி எண்.198 திட்ட அலுவலர் அசோக் ஜீ லிங்கம், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் வேல்ராஜ், செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ஆன்ட்ரயூஸ் கென்னடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மெஞ்ஞானபுரம்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மெஞ்ஞானபுரம் காவல்நிலையம் சார்பில் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் தலைமை தாங்கினார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்ரோஸ், சண்முகராஜ், விஜய தாஸ் ஆகியோர் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கி கூறினர். பின்னர் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ெசன்று, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு கோஷம் எழுப்பியவாறு பங்கேற்றனர்.
முத்தையாபுரம்
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் எம். தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, எம். சவேரியார்புரம் பள்ளி, கீதா மெட்ரிகுலேஷன்மேல்நிலை பள்ளி ஆகியவை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மகராஜன், சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஸ்பிக்நகர் பிரதான நுழைவு வாயிலில் தொடங்கிய ஊர்வலம் முத்தையாபுரம் சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளி வரை நடைபெற்றது. இதில், பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பாதைகளை ஏந்தியவாறு, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
பின்னர் சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ்துறை சார்பாக நடத்தப்பட்ட போதை விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.