பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டம்


பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டம்
x

பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவேண்டும். எந்த அரசு வந்தாலும் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் கானல்நீராகி வரும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவேண்டும். எந்த அரசு வந்தாலும் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மக்கள்தொகை

ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்குவது பரமக்குடி. வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நகரமாகும். நகராட்சியில் 36 வார்டுகளை கொண்டது.

இங்கு கைத்தறி நெசவாளர்கள், வணிகர்கள், கூலி தொழிலாளர்கள் நிறைந்து வாழும் பகுதியாகும். ஒவ்வொரு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்பது அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியாகவும் அதை நிறைவேற்றாமல் போவதும் தொடர்கதையாக தான் உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் என்பது பரமக்குடி மக்களுக்கு கனவாகவும் கானல் நீராகவும் இருந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் பரமக்குடி நகரில் மழைக்காலங்களில் மழை நீரும் சாக்கடை நீரும் ஒன்றாக கலந்து நகரில் பல்வேறு இடங்களில் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள், புழுக்கள், கிருமிகள் உற்பத்தியாகி காய்ச்சல், உள்பட பல்வேறு தொற்றுநோய் பரவும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அபாயம்

மேலும் பரமக்குடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் வைகை ஆறு மாசு படுகிறது. மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து விடுகிறது. இதனால் தொற்று நோய் அபாயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது கோரிக்கை யாக வைக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் பரமக்குடி மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வைகை ஆறு மாசுபடாமல் பாதுகாக்கப்படும்.

பரமக்குடி நகர் மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். கண்ட இடங்களில் கழிவு நீர் தேங்காது. கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகாமல் தொற்று நோய் என்பது கட்டுக்குள் வைக்கப்படும். ஆட்சிக்கு எந்த அரசு வந்தாலும் பாதாளசாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டு புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

முறையீடு

இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ராசி போஸ் (முன்னாள் நகர் மன்ற தலைவர்):

2001 முதல் 2006 -ம் ஆண்டு வரை நகர் மன்ற தலைவர் பொறுப்பில் நான் இருந்த போது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசிடம் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும் என முறையிட்டோம். அதைத் தொடர்ந்து பிறகு வந்த தி.மு.க. அரசிடமும் இது குறித்து முறையிடப்பட்டது. உடனே நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்ததிட்டத்தை நிறைவேற்றுவதற்காக மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

மேலும் அந்த நிறுவனம் பரமக்குடிக்கு வந்து பூமியின் தன்மையை ஆய்வு செய்து சர்வே செய்தனர். திடீரென மும்பையில் மழை வெள்ளம் வந்ததால் அந்த நிறுவனம் இந்த திட்டத்தை கைவிட்டு விட்டது. பரமக்குடிக்கு பாதாள சாக்கடை திட்டம் என்பது மிக மிக தேவையான ஒன்றாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வைகை ஆறு பாதுகாக்கப்படும். நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும். தொற்று நோய் பரவுவது தவிர்க்கப்படும் என்றார்.

வாக்குறுதி

வேலு (சமூக ஆர்வலர்): பாதாள சாக்கடை திட்டம் என்பது பரமக்குடியை பொறுத்தவரை காதில் கேட்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறதே தவிர கண்ணால் பார்க்கும் திட்டமாக இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த திட்டம் குறித்து வேட்பாளர்கள் வாக்குறுதியாகத் தான் வைக்கி றார்கள். ஆனால் அதை நிறைவேற்றியபாடில்லை.

வரும் காலங்களிலாவது இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டால் பரமக்குடி நகரம் சுகாதார நகரமாக இருக்கும். இனிவரும் தலைமுறையாவது நோய் நொடி இன்றி சுத்தமான வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை குடிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.எனவே இந்த திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பரமேஸ்வரி (குடும்ப தலைவி):

பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப ்பட்டால் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவு நீர் வைகை ஆற்றில் கலந்து கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் வைகை ஆறு மாசுபட்டு துர்நாற்றும் வீசுகிறது. திருவிழா காலங்களில் கூட வைகை ஆற்றில் அமர்வதற்கு பொதுமக்கள் மிகவும் அச்சப ்படுகின்றனர். வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் தொட்டிகளுக்குள் சாக்கடை நீர் சென்றுவிட்டால் குடிநீருடன் கலந்து சாக்கடையும் வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இவைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அவசியம் பாதாள சாக்கடை திட்டம் தேவை என்றார்.


Next Story