தூய்மை பணியாளர் தற்கொலை முயற்சி சம்பவம்: தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை
உடன்குடியை சேர்ந்த தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
உடன்குடியை சேர்ந்த தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.
தூய்மை பணியாளர்
உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் (மேஸ்திரி) பணியை கவனித்து வந்தார்.
இந்த நிலையில், சுடலைமாடனை மேற்பார்வையாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க, பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால், அவரை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சுடலைமாடன் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் சுடலைமாடனை நேரில் பார்த்தார்.
அவரது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு இருந்த, சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள், மகள் உமாமகேசுவரி ஆகியோரிடமும் விசாரித்தார். அதே போன்று சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோரிடமும் விசாரித்தார்.
நடவடிக்கை
பின்னர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன் என்பவரை சாதியை கூறி இழிவுபடுத்தியதாலும், பதவி உயர்வு வழங்க மறுத்ததாலும், விஷம் குடித்துள்ளார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி முன்னாள் தலைவியை கைது செய்ய வேண்டும். தற்போதைய பேரூராட்சி தலைவியின் அனுமதி இல்லாமல் அவரது மாமியார் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட முடியாது.
எனவே, தற்போதைய பேரூராட்சி தலைவி மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று ஆணையம் சார்பில் வலியுறுத்துகிறோம். தூய்மை பணியாளர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களுக்கு புகார்களை தைரியமாக தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர் வாரியம் செயல்படாமல் உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநில அளவிலான ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் 11 மாநிலங்களில்தான் ஆணையம் உள்ளது. ஆகையால் தமிழகத்தில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் பரிந்துரை செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மருத்துவமனை டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், சுரேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.